சிறப்பு செய்திகள்

ஆட்சியில் இல்லாத போது ஒரு கருத்து, இருக்கும் போது ஒரு கருத்து-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திருச்சி

திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை செல்லும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: எட்டு வழிச்சாலை அமைப்பதற்கு மாற்று இடம் எடுக்கப்படும் என்கிறாரே அமைச்சர்?

பதில்: மாற்று இடம் எப்படி எடுப்பீர்கள்? நிலம் எடுத்து தானே சாலை அமைக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும், நிலத்தை கையகப்படுத்தி தான் சாலை அமைக்க முடியும்.

அன்றைக்கு இருந்த அதிகாரிகள் தான் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஆட்சியில் இல்லாத போது ஒரு கருத்து, ஆட்சியில் இருக்கும் போது ஒரு கருத்து தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் திராவிட மாடலா?

எட்டு வழிச்சாலை தமிழ்நாட்டுக்கு வர இருந்த மிகப்பெரிய திட்டம். தமிழ்நாட்டு வர இருந்த திட்டம் இவர்களால் (தி.மு.கவினரால்) தடுத்து நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் என்ன சொல்கிறார்கள். அந்த திட்டம் வருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்கிறார்கள்.

அன்றைய தினம் அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த அத்தனை கட்சிகளுமே போராட்டம் நடத்தினார்கள். இன்றைக்கு அந்த கூட்டணி கட்சிகள் எல்லாம் மவுனத்தில் இருக்கிறார்கள். இதுவெல்லாம் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்கின்ற சதிசெயல்.

அனைத்திந்திய அண்ணா தி.மு.க ஆட்சியில் இப்படிப்பட்ட திட்டம் வந்துவிட்டால் எங்களுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்கிற கெட்ட எண்ணத்தின் அடிப்படையில் தான் அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.