சிறப்பு செய்திகள்

தொண்டர்களாக இருந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

திருச்சி,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் காட்டிய வழியிலே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் வழியிலே தொண்டர்களாய் இருந்து நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம் என்று எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை செல்லும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: இப்போ உள்ள சூழ்நிலையில் அ.தி.மு.க தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

பதில்: நான் தான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறேனே. அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் தொண்டர்களுடைய கட்சி. தொண்டர்கள் என்ன விருப்பப்படுகிறார்களோ அதைத்தான் செயல்படுத்துவோம். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

கேள்வி: பொதுமக்களிடையே அ.தி.மு.க பற்றி தவறான கருந்து பரவி வருகிறது. அதுபற்றி உங்கள் கருத்து.

பதில்: தவறான கருத்து இருந்தால். இவ்வளவு மக்கள் கூடுவார்களா? இன்றைக்கு திருச்சியே குலுங்கி இருக்கிறதே. நான் முதன் முதல் திண்டுக்கல் சென்றேன்.

பிரம்மாண்டமான கூட்டம். அதற்கு பிறகு தாராபுரம், காஞ்சிபுரம், பெருந்துறை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை. இப்பொழுது திருச்சிக்கு வந்திருக்கிறேன்.

எல்லா இடங்களிலுமே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கூடி வரவேற்கின்றார்கள். இதுதான் கட்சியினுடைய வலிமை. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வார்கள். அது மாதிரி கட்சியினுடைய வலிமை வரவேற்பை பொறுத்து இருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி. தனித்து நிற்கின்றது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் காட்டிய வழியிலே பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக எழை, எளிய, நடுத்தர, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட முன்னேற்றத்திற்காகவும், ஏற்றத்திற்காகவும் பாடுபட வேண்டும் என்பதற்காக தான் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி,ஆர் உருவாக்கினார்.

அப்படி இருபெரும் தலைவர்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள். அவர்கள் வழியிலே தொண்டர்களாய் இருந்து நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.