தற்போதைய செய்திகள்

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டிருக்கிறது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திருச்சி,

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காக அதை புறக்கணிப்பது சரியல்ல. வேண்டுமென்றே காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை செல்லும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நீங்கள் தொடங்கி வைத்தீர்கள். அந்த திட்டம் அப்படியே இருக்கிறதே. அதுபற்றி உங்கள் கருத்து.

பதில்: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் மிகப்பெரிய திட்டம். கிட்டதட்ட ரூபாய் 14 ஆயிரம் கோடியில் அந்த திட்டத்தை துவக்கி வைத்தோம். இத்திட்டத்தினால் 5 மாவட்டங்கள் பயன்பெறுகின்றது. திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இருக்கின்ற வறட்சியான பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால், அதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான நிலையான நீர் கிடைப்பதற்காக தான் இந்த திட்டத்தை நான் துவக்கினேன்.

நான் ஒரு விவசாயி என்கின்ற காரணத்தினாலே விவசாயம் பற்றியும். விவசாயிகள் பற்றியும் நான் முழுமையாக அறிந்திருப்பதன் காரணத்தினாலே இந்த திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம்.

வேண்டுமென்றே இன்றைக்கு ஆளுகின்ற திராவிட முன்னேற்ற கழக ஆட்சியாளர்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே இத்திட்டத்தை கிடப்பிலே போட்டிருக்கின்றனர். இதுவெல்லம் வருத்தமளிக்கிறது. மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை புறக்கணிப்பது சரியல்ல என்பது தான் என்னுடைய கருத்து.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.