தற்போதைய செய்திகள்

பதவி மீது ஆசையில்லை என்று கூறும் ஓபிஎஸ் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தது ஏன்?

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை

கழக பொதுக்குழு உறுப்பினர்களை குண்டர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கொச்சைப்படுத்தி பேசுகிறார். பதவி மீது ஆசை இல்லை என்று கூறுபவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தொண்டர்களை காயப்படுத்தியது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற கிராமத்து பழமொழி போல, ஓ.பன்னீர்செல்வம் குழப்பமான மன நிலையில், வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக பொதுக்குழு உறுப்பினர்களை, கொச்சைப்படுத்தும் விதமாக குண்டர்கள் என்று பேசுகிறார்.

தொண்டர்களின் கோயிலாக உள்ள தலைமை கழகத்தை, யார் குண்டர்களுடன் வந்து சர்வ நாசம் செய்தது என்று அனைவருக்கும் தெரியும். நடைபெற்ற பொதுக்குழுவில் ராணுவ கட்டுப்பாடுடன் கழகத்தினர் இருந்தனர். பொதுக்குழுவில் எந்த சலசலப்பும் கிடையாது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது திருட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதான் அவரின் லட்சணம் ஆகும். பன்னீர்செல்வம் கருத்துக்களால் தொண்டர்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். அவர் கருத்துக்களை இத்துடன் தெரிவித்துக்கொள்வது நல்லது.

முதலமைச்சர் பதவி மீதும், தலைவர் பதவி மீதும் ஆசை இல்லை என்று கூறுகிறார். அப்படி என்றால் உரிமையியல் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மறுபடியும் உயர்நீதிமன்றம் சென்று மனு தாக்கல் செய்தது ஏன்? நீங்கள் வழக்கு தொடுப்பது மூலம் தொண்டர்கள் மிகவும் மன வேதனையையும், கடுமையான மன உளைச்சலில் உள்ளார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.