தமிழகம் தற்போதைய செய்திகள்

மாநகராட்சி, பேரூராட்சி மன்ற கூட்டங்களில் தி.மு.க. கவுன்சிலர்கள் கொந்தளிக்கின்றனர்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திருச்சி

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் மாநகராட்சி, பேரூராட்சி கூட்டங்களில் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்களே கொந்தளிக்கின்றனர் என்றும் மக்களை சந்திக்க முடியவில்லையே என்றும் கூட்டத்தில் தங்களது கருத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை செல்லும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: பல்வேறு மாநகராட்சி கூட்டங்களில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யக்கூடிய காட்சிகளை பார்க்க முடிகிறது. இதுபற்றி உங்கள் கருத்து.

பதில்: எந்த கட்சி உறுப்பினர்கள் அதிகம் வெளிநடப்பு செய்கின்றனர். இந்த மாநகராட்சி, பேரூராட்சி கூட்டங்களில் பார்த்தீர்கள் என்றால் அண்ணா தி.மு.கவை விட ஆளுகின்ற கட்சியை சேர்ந்தவர்கள் அதிகம் புறக்கணித்து வெளிநடப்பு செய்யக்கூடிய காட்சிகளை பார்க்க முடிகின்றது.

ஏன் என்றால்? அவர்கள் தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் தி.மு.கவை சேர்ந்த கவுன்சிலர்கள் வெளியில் செல்ல முடியவில்லை. மக்களை சென்று சந்திக்க முடியவில்லை.

மக்களை சென்று சந்திக்கின்ற பொழுது ஏன் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கொந்தளிக்கின்றனர். இதை கூட்டத்தில் வெளிப்படுத்துகின்றனர். இதுதான் நிலைமை.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.