சேலம்

60 ஆண்டுக்குப்பின் நிரம்பியது தாரமங்கலம் ஏரி -எம்.எல்.ஏ தலைமையில் கழக நிர்வாகிகள் மலர் தூவி தண்ணீரை வரவேற்றார்

சேலம்

எடப்பாடியார் தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி உபரிநீரட்ட திட்டத்தில் ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தால் சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஏரி 60 ஆண்டுக்குப்பின் நிரம்பியது. இதையடுத்து சங்ககிரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றார்.

சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கழக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த போது கொண்டு வந்த காவிரி உபரி நீர் திட்டத்தில் 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் கீழ் திறந்து விடப்பட்ட தண்ணீர் திப்பம்பட்டி, சின்னேரி, மானத்தாள், தொளசம்பட்டி, பெரியேரிப்பட்டி ஆகிய ஏரிகள் நிரம்பி வந்தது.

இதனைத்தொடர்ந்து சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தாரமங்கலம் ஏரி காவிரி உபரி நீரால் நிரம்பியது. ஏரி நிரம்பியதையடுத்து சங்ககிரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் மலர் தூவி வரவேற்றனர்.

சுமார் 160 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரி நிரம்பிய பின்னர் உபரி நீரானது பவளத்தானூர், துட்டம்பட்டி ஆகிய ஏரிகள் வழியாக சென்று சரபங்கா நதியில் கலக்கிறது.


இதனிடையே தாரமங்கலம் ஏரியில் இருந்து பவளதனூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

இதைத்தொடர்ந்து சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் நீர் வழித்தடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது நகர கழக செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், சிவலிங்கம், நகர கழக அவைத்தலைவர் கோவிந்தராஜ், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் துரைராஜ், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் செங்கோடன், வார்டு செயலாளர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் ரமேஷ், தில்லை, பாலசந்தர், கார்த்திக், சண்முகம் மற்றும் பழனிசாமி, ஏடிசி ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.