தி.மு.க எம்.எல்.ஏ. வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியல்- நாட்றம்பள்ளி அருகே திடீர் பரபரப்பு

திருப்பத்தூர்
சுடுகாட்டிற்கு வழியை ஏற்படுத்தி தராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தி.மு.க எம்.எல்.ஏ.வின் வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி ஜங்களாபுரம், பன்னாண்டகுப்பம், கொல்லக்கொட்டாய் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சுடுகாட்டு வழியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளதால் இறந்தவர்களின் சடலத்தை எடுத்து செல்லும் போது பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தி.மு.க எம்.எல்.ஏ தேவராஜி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் ஆகியோரிடம் பலமுறை சுடுகாட்டிற்கு வழி கேட்டு மனு கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் விடியா தி.மு.க அரசு மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலார்பேட்டை தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி ஆத்தூர்குப்பம் ஊராட்சியில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஜங்ளாபுரம் அருகே வந்தார்.
அப்போது திடீரென்று திமுக சட்டமன்ற உறுப்பினரின் வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது எம்.எல்.ஏ உடன் வந்த திருப்பத்தூர் மாவட்ட திமுக சேர்மன் சூரியகுமார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் நாங்கள் இவ்வழியாக வந்ததால் தான் இப்படி செய்கிறீர்கள் வேறு பாதையில் சென்று விட்டு இருந்தால் என்ன உங்களால் செய்து இருக்க முடியும் என அநாகரிகமாக பேசியது வாக்களித்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத விடியா தி.மு.க அரசுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.