திருவண்ணாமலை

தி.மு.க., அ.ம.மு.க.வில் இருந்து 300 பேர் விலகி வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் பகுதியில் திமுக, அமமுக கட்சிகளில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் விலகி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், நயம்பாடி ஊராட்சியில் திமுக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியும், புதியதாகவும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நயம்பாடி பகுதியில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை தெற்கு எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாற்று கட்சிகளில் இருந்து கழகத்தில் இணைந்த அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற புரட்சித்தலைவி அம்மா மக்களுக்காக வாழ்ந்தார். அதன்படி முதலமைச்சர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அரசாக, இன்றைக்கு இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக மாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்று உள்ளார்.

முதலமைச்சர் தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்கி உள்ளார். இந்த மூன்று மாத காலத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிர் இறப்பின் எண்ணிக்கையும் கட்டுக்குள் உள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து மக்கள் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை கடைபிடித்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தினால் மட்டுமே விரைவில் கொரானா தாக்கம் கட்டுக்குள் வரும்.

இந்தப் பேரிடர் காலத்தில் மக்களுக்கு எவ்வாறு நிவாரண உதவி வழங்குவது, மக்களின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என்று பல்வேறு யோசனைகளை முன்னிறுத்தி முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசு இயங்கி வரும் இந்த சூழலில் எதிர்க்கட்சியினர் ஏதாவது ஒன்றைச் சொல்லி அரசின் மீது தேவையற்ற வதந்திகளை தூற்றி வருகின்றனர். பேரிடர் காலத்தில் கூட அரசியல் செய்யும் எதிர்க்கட்சியினரை தமிழ்நாட்டு மக்கள் ஒருகாலமும் மன்னிக்க மாட்டார்கள்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொன்னது போல் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அம்மாவின் அரசு தான் ஆட்சி செய்யும். நாம் அனைவரும் அம்மாவின் ஆட்சி தொடர இந்நன்னாளில் உறுதியேற்போம்

இவ்வாறு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், கிருமிநாசினிகள் பயன்படுத்தியும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, மாவட்ட கவுன்சிலர் தவமணி, ஒன்றிய குழு உறுப்பினர் வக்கீல் ரமேஷ், கூட்டுறவு சங்கத் தலைவர் வனிதா தியாகராஜன், ஒன்றிய, கிளை, கழக நிர்வாகிகள் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.