தற்போதைய செய்திகள்

தேனி மாவட்ட கழகம் சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் கண்மாய்கள் தூர்வாரும் பணி – வி.ப.ஜெயபிரதீப் துவக்கி வைத்தார்

தேனி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் அதிகாரி கண்மாய் தெப்பம்பட்டி வெள்ளைப்பாறை கண்மாய்களில் மாவட்ட கழகம் சார்பில் தூர்வாரும் பணியை பசுமை உலகம் வி.ப.ஜெயபிரதீப் துவக்கி வைத்தார்

இந்த ஆண்டு மாவட்ட கழகம் சார்பில் பத்து குளங்கள் தூர்வாரப்படுகின்றன. கடந்த மாதம் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கெங்குவார்பட்டி மத்தூர் வார்குளம், மேல்மங்கலம் நெடுங்குளம் ஆகிய கண்மாய்களில் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.

மேலும் சிலமலை அனுமந்தன்பட்டி பல்லவராயன்பட்டி பொட்டிபுரம் புதுக்கோட்டை உள்ளிட்ட 8 குளங்களில் தூர் வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீதமுள்ள ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் அதிகாரி கண்மாய். தெப்பம்பட்டி வெள்ளைப்பாறை கண்மாய்களில் நேற்று மாவட்ட கழகம் சார்பில் தூர்வாரும் பணி துவங்கியது. பசுமை உலகம் வி.ப.ஜெயபிரதீப் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார். இந்த பணியில் வரத்து வாய்க்கால், உபரி வாய்க்கால் சீரமைக்கப்பட உள்ளது.

மேலும் குளங்களின் உட்புறம் சமப்படுத்தப்பட்டு எஞ்சியுள்ள மண்ணை கொண்டு கரைகள் அகலப்படுத்தப்பட்டும், கரைகள் வலுப்பெற மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது. இப்பணியினால் கண்மாயை சுற்றி நிலத்தடி நீர் உயரும். மேலும் இக்கண்மாய்களில் தேக்கப்படும் தண்ணீரின் மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன், துணைத்தலைவர் வரதராஜன், ஆயக்கட்டு தாரர்கள், விவசாயிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.