சிறப்பு செய்திகள்

இனி எங்களை ஏமாற்ற முடியாது தி.மு.க அரசுக்கு பாடம் புகட்டுவோம்-தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகள் ஆவேசம்

சென்னை

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை தருவோம், மகளிர் சுய உதவிக்குழுவினரின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்வோம், அந்த ரகசியம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றெல்லாம் 525 வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள் அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், இன்றைய முதலமைச்சருமான ஸ்டாலின்,

அவரது மகன் உதயநிதி ஸ்டாலின். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் ஏமாற்று வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார் ஸ்டாலின். குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவது பற்றி வாயையே திறக்காமல் இருந்தார்.

அதன்பிறகு விடியா தி.மு.க. அரசின் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மட்டும் லேசாக வாயை திறந்தார். அதாவது தகுதியான பயனாளிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவோம் என்று பட்டும், படாமலும் சொன்னார். அதை மக்கள் யாரும் நம்பவில்லை. இது ஏமாற்று வேலை என்று குடும்ப தலைவிகள் அப்போதே கொதித்து எழுந்தனர்.

வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆகி விட்டது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. ஊர், ஊராக சென்று தந்தை, மகன் அளந்து விட்ட கதையை நம்பி 48 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் வாங்கினர்.

ஆனால் இந்த விடியா அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடிக்கு புதிய நிபந்தனைகளை விதித்தது. இந்த புதிய நிபந்தனைகளின்படி சுமார் 35 லட்சத்து 38 ஆயிரம் நபர்கள் நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதியை பெறவில்லை என்றும் சுமார் 13 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் மட்டுமே நகைக்கடன் பெற தகுதி உள்ளவர்கள் என்றும், அவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆணை பிறப்பித்தது. இது தான் விடியா அரசு தேர்தல் வாக்குதியை நிறைவேற்றிய லட்சணம்.

இந்நிலையில் தான் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சரின் இல்ல திருமண விழாவில் பேசிய விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகவும் எஞ்சிய 30 சதவீத வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும் நிதி பிரச்சினையை சீரமைத்த பின் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் பொய் கதையை அளந்து விட்டிருக்கிறார் விடியா அரசின் திராவிட மாடல் முதலமைச்சர் ஸ்டாலின்.

எத்தனை முறை தான் அவரால் மக்களை ஏமாற்ற முடியும். இந்த முறை நடக்காது என்கிறார்கள் குடும்ப தலைவிகள். ஆயிரம் ரூபாய் தருவோம் என்றீர்களே என்ன ஆச்சு என்று கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.

அதை சமாளிக்கவே ஸ்டாலின் நிதி பிரச்சினையை சீரமைத்த பின் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று மீண்டும் தனது பித்தலாட்டத்தை தொடங்கியிருக்கிறார். இந்த பொய், பித்தலாட்டத்தை நாங்கள் நம்ப தயாரில்லை என்று குடும்ப தலைவிகள் ஆவேசமாக கூறி உள்ளனர்.

இதுபற்றி கோவையை சேர்ந்த குடும்ப தலைவிகள் கூறுகையில், தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான பல வாக்குறுதிகளை கூறிய திமுக குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தது. ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அந்த அறிவிப்பை நடைமுறைபடுத்தவில்லை.

கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தி.மு.க.வில் ஒரு சிலர் கூறினாலும் எங்கேயும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக தெரியவில்லை. இதனால் தி.மு.க.வை நம்பி வாக்களித்த குடும்ப தலைவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது மட்டுமன்றி மகளிருக்கு சாதாரண பேருந்துகளில் இலவச பயண வசதி எனக்கூறிய நிலையில் சாதாரண பேருந்துகள் பெருமளவு குறைக்கப்பட்டதால் மற்ற பேருந்துகளில் கட்டணத்தை அதிகமாக செலுத்தி செல்ல வேண்டி உள்ளது என மகளிர் திமுக மீது கொந்தளித்து வருகின்றனர். சிலிண்டருக்கு மானியம் 100 தருவதாக அறிவித்த திமுக அந்த அறிவிப்பு குறித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மேலும் கழக ஆட்சியில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் மகளிர் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தது. அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே மகளிர் பயன்பெறும் இத்திட்டத்தையும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிறுத்தி விட்டது.

குடும்பத் தலைவிகள் வாக்குகளை பெற பல வாக்குறுதிகளை கூறி விட்டு மகளிர்கள் பயன்பெறும் வகையில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளையும், மகளிர்களையும் தொடர்ந்து தி.மு.க ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த குடும்ப தலைவிகள் கூறுகையில், தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். மேலும் எங்களிடம் வாக்குகள் கேட்க வந்த மூர்த்தி, அப்போது அவர் அமைச்சராகவில்லை.

இப்போது தி.மு.க. அமைச்சராக அமைச்சராக இருக்கிறார். அவர் சொன்னார் நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயம் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து உள்ளாட்சித்தேர்தலிலும் தி.மு.க அமைச்சர் மூர்த்தி வாக்குகளை கேட்க வந்த பொழுது நிச்சயம் தருவோம் என்று கூறினார். ஆனால் இதுவரை 15 மாதம் ஆகியும் எங்களுக்கு வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் எங்களை வஞ்சிக்கும் வகையில் வீட்டு வரியையும், சொத்து வரியையும் உயர்த்தி விட்டனர். ஆகவே இந்த தி.மு.க அரசுக்கு வருகின்ற தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டுவோம்.

இதேபோல் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொகுதியை சேர்ந்த குடும்ப தலைவிகள் கூறுகையில், கடந்த தேர்தல் அறிக்கையில் தி.மு.க பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் என்று கூறினார்கள். எங்களை போன்ற சாதாரண குடும்பத்திற்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது உதவிகரமாக இருக்கும் என்று நினைத்து, கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களித்தோம்.

ஆனால் இதுவரை இதுகுறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. சமீபத்தில் கூட நிதி அமைச்சர் இதற்கு கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்று கூறினார். இது தொடர்பாக எந்த அதிகாரிகளும் எங்கள் பகுதிகளில் வரவில்லை. மேலும் தி.மு.க மாமன்ற உறுப்பினர்களிடம் இதுகுறித்து நாங்கள் கேட்டதற்கு, எங்களுக்கும் இதுகுறித்து தகவல் வரவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.

கடந்த சுதந்திர தின விழாவில் கூட இது குறித்து, முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூட எதிர்பார்த்தோம். ஏமாற்றம் தான் மிஞ்சியது. தற்போது கூட புதுச்சேரி முதல்வர் கூட குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். ஆனால் தமிழக முதலமைச்சருக்கு அறிவிக்க மனமில்லை. ஆகவே வருகின்ற தேர்தலில் சரியான பாடத்தை நாங்கள் தி.மு.க.வுக்கு புகட்டுவோம் என்றனர்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்றி பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றார். ஆனால் தற்போது உள்ள தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து விட்டு நிறைவேற்றாமல் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்கிறார்கள்.

அவர்களுடைய வாக்குறுதிகளை நம்பி நாங்களும் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டோம். ஆகவே பொதுமக்களை ஏமாற்றாமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத் தலைவிகளின் உரிமை தொகையை தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு வழங்க வேண்டும்.

இதேபோல் சேலத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை எதுவுமே நிறைவேற்றாமல் உள்ளனர். பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். இந்த வாக்குறுதி ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்தும் நிறைவேற்றப்படவில்லை.

உரிமை தொகையாக 1,000 ரூபாயை தருவதாக கூறிவிட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தி விட்டார் ஸ்டாலின். தி.மு.க.வுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று வருத்தப்படுகிறோம். எடப்பாடியாருக்கு ஓட்டு போட்டு இருந்தால் கூட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கொடுத்திருப்பார்.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் பொழுது, ஏன் தமிழகத்தில் கொடுக்க முடியாது? புதுச்சேரியை பார்த்தாவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதத்தை நிறைவேற்றி விட்டாராம்.

இன்னும் 30 சதவீதம் தான் இருக்கிறதாம். இது எப்படி இருக்கிறது. சிலரை சில காலம் ஏமாற்றலாம். பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால் மக்களை இனி எப்போதும் ஏமாற்ற முடியாது. அதை இந்த விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்து கொள்வது நல்லது. இல்லையென்றால் நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் வாக்குரிமையை பயன்படுத்தி தி.மு.க. அரசுக்கு தக்க பாடத்தை புகட்டுவோம்.

இவ்வாறு குடும்ப தலைவிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.