எடப்பாடியார் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்

மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ பேட்டி
கோவை
எடப்பாடியார் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு, 40 வெற்றி பெறுவோம் என்று கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.
ஜூலை 11-ம்தேதி முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் தலைமையிலான கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டம் முழுவதும் கழகத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
மேலும் கோவை இதய தெய்வம் மாளிகையில் மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர் செ.தாமோதரன் எம்.எல்.ஏ, ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தசாமி எம்எல்ஏ, கழக இளைஞர் அணி துணை செயலாளர் டிகே.அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ, மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ, ஆகியோர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதைத்தொடர்ந்து மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இன்றைய தீர்ப்பு. ஒரு நியாயமான தீர்ப்பு எடப்பாடியார் தலைமையிலான எங்களுக்கு கிடைத்திருக்கிறது. எடப்பாடியாரின் பக்கம் அனைத்து தொண்டர்களும் இருப்பதற்கு இதுவே ஒரு உதாரணமாகும்.
இத்தீர்ப்பை எதிர்ப்பவர்கள் எந்த நீதிமன்றம் சென்றாலும் எடப்பாடியார் பக்கமே தீர்ப்பு வந்து சேரும். புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மா எடப்பாடியார் தலைமையிலான அ.தி.மு.க.வை ஆசீர்வதிக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் 40க்கு 40 வெற்றி பெற்று மக்கள் எங்கள் பக்கம் என்பதை நிரூபிப்போம்.
எடப்பாடியார் தான் எங்களின் பொதுச்செயலாளர். கழக ஆட்சியில் எடப்பாடியார் தலைமையிலான நான்கரை ஆண்டு கால சிறப்பான ஆட்சிக்கும் இப்போது நடைபெற்று வரும் தி.மு.க ஆட்சியையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்க தொடங்கி விட்டனர். மக்கள் மீண்டும் எடப்பாடியார் முதல்வராக வரவேண்டும் என முடிவு செய்து விட்டனர். எதிர தரப்பினர் உச்ச நீதிமன்றம் சென்றாலும் சரி, ஐ.நா.வுக்கே சென்றாலும் சரி. கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தான்.
இவ்வாறு அவர் கூறினார். அளித்தார்.
பேட்டியின் போது மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், சார்பில் நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.