கழகத்தை வலிமையான இயக்கமாக எடப்பாடியார் வழி நடத்துவார்

முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பேட்டி
சேலம்,
தீர்ப்பின் மூலம் ஓ.பி.எஸ்.சுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் கழகத்தை வலிமையான இயக்கமாக வழி நடத்துவார் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் கூறி உள்ளனர்.
ஜூலை 11-ம்தேதி நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து
சேலம் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், அண்ணா பூங்காவில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா மணி மண்டபத்தில் எம்.ஜி.ஆர்., அம்மா சிலைகளுக்கு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் தலைமையில், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மணிமண்டபம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதுகுறித்து கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கூறும் போது:- பொதுக்குழு தான் எதையும் நிர்ணயிக்கும் சக்தி என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. மேலும், ஒற்றை தலைமை வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
விரைவில் இடைக்கால பொதுச்செயலாளர் அனுமதியோடு பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, எடப்பாடியார் தான் இந்த இயக்கத்தை வழிநடத்தும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றார்.
இதுவரை நிலவி வந்த குழப்பத்திற்கு இந்த தீர்ப்பு மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு பிறகு அவர்களது வழியில் வந்த எடப்பாடியார் கழகத்தை வலிமையான இயக்கமாக வழி நடத்துவார் என்றார்.
இதுகுறித்து சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் கூறும் போது:-
கழகத்தை வழி நடத்தும் ஒரே சக்தி எடப்பாடியார் தான். இந்த தீர்ப்பு மூலம் கழக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகி உள்ளது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்பதால் ஓ.பி.எஸ். தாமாக முன்வந்து கழகத்தில் இருந்து விலகி கொள்ள வேண்டும். ஓ.பி.எஸ்., சசிகலா மற்றும் ஸ்டாலினுடன் கூட்டு வைத்துக்கொண்டு அவர்களை புகழ்ந்து பேசுகிறார்.
இதனால் கழக தொண்டர்களின் மனம் வெந்துபோய் உள்ளனர். இந்த நிலையில் இந்த தீர்ப்பு மூலம் ஓ.பி.எஸ்.சுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு மூலம் ஓ.பி.எஸ். அடிமட்ட தொண்டனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றார்.