தற்போதைய செய்திகள்

இந்தியாவிலேயே இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் இயக்கம் கழகம் – எம்.ஏ.முனியசாமி பெருமிதம்

ராமநாதபுரம்

இந்தியாவிலேயே இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கும் இயக்கம் கழகம் தான் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பெருமிதத்துடன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட அரியாங்கோட்டை ஊராட்சியில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் நிர்வாகிகள் தேர்விற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட கழக செயலாளருமான எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார்.

கழக அம்மா பேரவை இணைச்செயலாளரும், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினருமான என்.சதன்பிரபாகர் முன்னிலை வகித்தார். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் நயினார்கோயில் ஒன்றிய கழக செயலாளர் குப்புசாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், ஒன்றிய கவுன்சிலர் வேந்தோணி சுப்பிரமணியன், சத்தியேந்திரன், ரஜினிகாந்த், பேரையூர் முனியசாமி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

கழகத்தின் காவல் தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவால் தொடங்கப்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணிக்கு மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த பாசறை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சுறுசுறுப்புடனும், உத்வேகத்துடனும் செயல்பட்டு வருகிறது.

கடந்த சட்டமன்றத்தேர்தலின் வெற்றிக்கு இளைஞர் பாசறை பட்டாளங்கள் பெரிதும் உதவினர். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் உழைப்பு கழகத்திற்கு வேண்டும். அம்மா அவர்கள் விட்டுச்சென்ற கழகத்திற்கு இளைஞர்கள் பாதுகாவலராக இருக்க வேண்டும்.

முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இளைஞர் பாசறையின் உழைப்பிற்கு நல்ல எதிர் காலம் உண்டு. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக கழகத்தில் உள்ள இளைஞர்கள் வரலாம். கழகத்தில் உண்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் பதவிகள் தேடிவரும். அனைவரும் கழகத்திற்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருக்க வேண்டும்.

இந்தியாவிலையே இளைஞர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினராக அதிகம் வாய்ப்பு வழங்கும் இயக்கம் ஒன்று உள்ளது என்றால் அது கழகம் தான். தகவல் தொழில் நுட்ப அணியை போல் இளைஞர் பாசறை நிர்வாகிகளும் எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். கழகத்தின் சிப்பாய்களாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணி செயல்பட வேண்டும்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.