தற்போதைய செய்திகள்

கழக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி விட்டது

முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர்
கழக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறி உள்ளார்.

ஜூலை 11-ம்தேதி நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என்று கழகத்திற்கு சாதகமாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்ததையொட்டி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இதனை தொடர்ந்து நன்னிலம் பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், அன்பு, ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி, நகர செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளரிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவர் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் இயக்கம் கழகம். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளராக 25 ஆண்டு காலம் பணியாற்றி அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய இயக்கமாக கொண்டு வந்தார்.

அவரது மறைவுக்கு பின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நான்காண்டுகளும் மூன்று மாதமும் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வையும் வலுவான இயக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டுமென்ற கோரிக்கை தொண்டர்களால் ஒருமனதாக ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுக்குழு கூடி ஜனநாயக அடிப்படையில் எடப்பாடி கே.பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை கட்சியின் தொண்டர்கள் அனைவரும் அகமகிழ்ந்து வரவேற்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தீர்ப்பு வந்துள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பம் ஏற்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது நீதியின் மூலம் நிலை நாட்டப்பட்டுள்ளது.

எடப்பாடியார் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை சரியென்று நீதிமன்றம் தெரிவித்ததன் மூலம் தொண்டர்களும், நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காமராஜ் தெரிவித்தார்.