ராமநாதபுரம்

எதிர்கட்சிகளின் பொய் முகத்திரையை கிழிக்கும் ஏவுகணையாக தகவல் தொழில் நுட்ப அணி செயல்பட வேண்டும் – எம்.ஏ.முனியசாமி பேச்சு

ராமநாதபுரம்:-

எதிர் கட்சிகளின் பொய் முகத்திரையை கிழிக்கும் ஏவுகணையாக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் கழக மற்றும் ஊராட்சி, வார்டு வாரியான புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனைக்கூட்டம் பரமக்குடியில் உள்ள கீர்த்தி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். கழக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அன்வர் ராஜா முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் ஏ.சரவணக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் பணியினை கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் பொய்யான தகவல்களை முறியடிக்கும் வகையில் நமது தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். எதிர்வரும் 2021 தேர்தலை நோக்கி தகவல் தொழில்நுட்ப அணியினர் களப்பணி ஆற்ற வேண்டும். உங்களுக்கு எல்லா வகையிலும் மாவட்ட கழகம் முழு ஒத்துழைப்பு தரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த திட்டங்களையும், புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டங்களையும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

படித்த இளைஞர்களை அதிகளவில் கழகத்தில் இணைக்க வேண்டும். எதிர் கட்சிகளின் பொய் முகத்திரையை கிழிக்கும் ஏவுகணையாக கழக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் புதிய உறுப்பினர்களை இணைக்க ஒன்றிய செயலாளர் ஆர்வம் காட்ட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

கூட்டத்தின் நிறைவாக அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்களிடம் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம் படிவத்தை மற்றும் கட்சியின் புதிதாக உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி வழங்கினார்.

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் எம்.அசோக்குமார், முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.தர்மர், திருப்புல்லாணி ஒன்றிய கழக செயலாளர் கருப்பையா உட்பட ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.