தற்போதைய செய்திகள்

மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டம்

கன்னியாகுமரி

எடப்பாடியார் விரைவில் கழக நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார் என்றும் அவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி என்றும் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பை வரவேற்று
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதன்பின்னர் முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடியார் கரங்கள் வலுப்பெற்றுள்ளதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடியார் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்பார் என்று தெரிவித்தார்.