எத்தர்களுக்கும், துரோகிகளுக்கும் சரியான சாட்டையடி-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கருத்து

சென்னை,
தி.மு.க.வுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டு கழகத்தை அபகரிக்க நினைக்கும் எத்தர்களுக்கும், துரோகிகளுக்கும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியான சாட்டையடி தீர்ப்பாக அமைந்திருக்கிறது என்று முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பு செயலாளரும், கழக இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் கூறி உள்ளார்.
கழகத்திற்கு சாதகமாக வந்த உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பு செயலாளரும், கழக இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் கூறியதாவது:-
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஜூலை 11-ல் நடந்த அண்ணா தி.மு.க பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருப்பதன் மூலம், எடப்பாடியார் பொதுச்செயலாளராகத் தேர்ந்தேடுக்கப்பட்டது செல்லும் என்று நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம், சாமானிய மக்களின் உரிமைக்குரலாக எடப்பாடியாரின் குரல் மக்கள் மன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு தோல்விகளை கண்டாலும், வெகுண்டெழுந்து வெற்றி காணக்கூடிய ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக திகழ்கிறது. இன்று தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக, முதன்மை இயக்கமாக கழகம் திகழ்வதற்கு காரணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா, அவர்களின் ஆசியுடன் தொண்டர்களை வழிநடத்தும் இடைக்கால பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரும் தான். கழக தொண்டர்களின் மனம் அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு, தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார்.
கழக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன், கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடியார் தலைமையை அனைவரும் ஏற்க தயாராகி விட்ட நிலையில், கழக பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என்றும், தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்றும் ஓ.பி.எஸ் நீதிமன்றத்தை நாடியது கழகதொண்டர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், தி.மு.க.வுடன் உறவு வைத்துக்கொண்டு மக்களின் நலனுக்காக எதிர்க்குரல் கொடுக்காமல் தி.மு.க.வுக்கு ஆதரவாகவே பேசி வருவதும் முக சுளிப்பையும் ஏற்படுத்தி வருவதன் பலனாகத்தான், எடப்பாடியாரை ஒற்றைத்தலைமையாக வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
கழகத்தில் எடப்பாடியாரின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்களும், கழக தொண்டர்களும் உற்சாக வரவேற்பை அளித்து வருவதே அதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு கழகம் அழிந்து விடும், ஒழிந்து விடும் என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில், நமக்கெல்லாம் முத்தாய்ப்பாக எடப்பாடியார் கழகத்திற்கு தலைமையேற்று ஆட்சியையும், கட்சியையும் பொலிவோடும், தெளிவோடும் கட்சியை வழிநடத்தி பல்வேறு திட்டங்களின் வாயிலாக சிறந்த நல்லாட்சியை நடத்தி காட்டினார்.
கழகத்தில் சிறு பிளவு ஏற்பட்டு, சின்னம் முடக்கப்பட்ட போது, மீண்டும் ஒரு சட்டப்போராட்டம் நடத்தி சின்னத்தை மீட்டெடுத்த பெருமை எடப்பாடியாரையே சாரும். தி.மு.க.வுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டு கழகத்தை அபகரிக்க நினைக்கும் எத்தர்களுக்கும், துரோகிகளுக்கும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியான சாட்டையடி தீர்ப்பாக அமைந்திருக்கிறது.
ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரம், குடிமராமத்து நாயகன், காவிரியை மீட்ட தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழித்தோன்றல், மக்களின் ஆதரவு பெற்ற ஒரே தலைவர் எடப்பாடியார் தலைமையின் கீழ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பீடுநடை போடும் என்பது திண்ணம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பு செயலாளரும், கழக இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் கூறினார்.