தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேசுவர் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசேலசுவரர் திருக்கோயில் வளாகத்தில் பக்தாகளின் தரிசனத்திற்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், விநாயகர் சன்னதிகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

நினைத்தாலே முக்தி தரும், பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலையில் எல்லாம் வல்ல உண்ணாமுலை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருத்தலத்தில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த 01.09.2020 அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்களின் தரிசனத்திற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருக்கோயில் இராஜகோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு ‘Q’ வரிசை கூண்டுகள் அமைக்கப்பட்டும், சமூக இடைவேளி கடைபிடிக்க வளையங்கள் வரையப்பட்டுள்ளது. இராஜகோபுரம் நுழைவு வாயிலில் தானியங்கி கை சுத்திகரிப்பு (Automatic Hand Sanitizer) வசதி செய்யப்பட்டு, அனைத்து பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை ஸ்கேனிங் கருவி மூலம் பரிசோதிக்கப்படுகிறது.

அருணாசலேசுவரர் திருக்கோயில் சாமி தரிசனம் காலை 06.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும், 10 வயதிற்கு கீழ், 65 வயதிற்கு மேல் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. சாமி தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் பேகோபுரம் வழியாக வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். திருக்கோயிலின் பின்புறம் வெளியில் செல்லும் வழியில் பக்தர்கள் பிரசாதம் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தின் கீழ் தினமும் 400 பக்தர்களுக்கு காலை 11.30 மணி முதல் சாம்பார் சாதம், தயிர் சாதம் பொட்டலங்கள் அளிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்காலில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அதிநவீன பாலகம் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.