எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கான பிள்ளையார் சுழி இந்த தீர்ப்பு-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை,
எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கான பிள்ளையார் சுழி இந்த நீதிமன்ற தீர்ப்பு என்று எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழி சாலையில் எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
இன்றைக்கு ( நேற்று) ஒரு அற்புதமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. பொதுக்குழுவில் உள்ள 98 சதவீதத்தினர் எடப்பாடியார் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானித்தார்கள்.
அதன் அடிப்படையில் இன்றைக்கு நீதி வென்றுள்ளது. இன்றைக்கு ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நல்ல ஆட்சியை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து எடப்பாடியார் அற்புதமான ஆட்சியை அளித்தார். பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அளித்தார். அந்த திட்டங்கள் அனைத்தும் இன்றைக்கு முடக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் மீண்டும் எடப்பாடியார் முதல்வராக வரவேண்டும் என்று பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.
அவர்கள் என்ன மேல் முறையீடு செய்தாலும் தொண்டர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக எடப்பாடியார் பக்கம் இருப்பதால் கண்டிப்பாக நீதி வெல்லும். மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையிலே அமைவது உறுதி.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.