தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் மலர அடித்தளமாக அமையும்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி

மதுரை
ஒன்றரை கோடி தொண்டர்களின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி இந்த தீர்ப்பு என்றும், இது எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர அடித்தமாக அமையும் என்றும் கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார்.

ஜூலை 11-ந்தேதி அன்று நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தையொட்டி
கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. திருப்பரங்குன்றத்தில் கேக் வெட்டி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ் சத்யன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் சேர்ந்து எடப்பாடியாரை தேர்வு செய்தது என்ற நல்ல தீர்ப்பு என்கிற வகையில் அமைந்துள்ளது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வர இந்த தீர்ப்பு பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர இந்த தீர்ப்பு அடித்தளமாக அமையும்.

எடப்பாடியாரை கழக பொது செயலாளராக ஏற்று அவருக்கு கீழே நாங்கள் அமைப்பு செயலாளராக, மாவட்ட செயலாளராக பணியாற்றும் நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இது அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி ஆகும். ஒற்றை தலைமை எடப்பாடியார் தலைமையில் வர வேண்டும் என்ற தொண்டர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட வகையில் இந்த தீர்ப்பு வந்து உள்ளது.

போராட்டத்தின் மூலம் தான் ஒரு தலைவன் உருவாக்க முடியும். அதன் அடிப்படையில் தற்போது அ.தி.மு.க. பொது செயலாளராக எடப்பாடியார் தலைமையில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். மீண்டும் அம்மா ஆட்சி மலர உழைப்போம்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.