தற்போதைய செய்திகள்

கழக வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் – அம்மா பேரவை தொண்டர்களுக்கு ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

மதுரை

எவரெஸ்ட் சிகரம் போல் விண்ணை முட்டும் கழக அரசின் இமாலய சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து கழகத்தின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கழக அம்மா பேரவை செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் கல்லுப்பட்டியில் நடைபெற்றது. இந்த முகாமை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-

ஒன்றரை கோடி கழக தொண்டர்களின் குல தெய்வமாக வாழும் அம்மாவின் திருநாமத்தில் கழக அம்மா பேரவை உள்ளது. அம்மா அவர்கள் இருக்கும் போதும் சரி. தற்பொழுது முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இடும் கட்டளைகளையும்சரி கழக அம்மா பேரவை ராணுவ சிப்பாய்களாக இருந்து கழகத்திற்கு வெற்றியே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தில் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும், நகர் பகுதியில் உள்ள வார்டுகளிலும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்து தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் முதன்மை இடத்தில் திகழ்கிறது என்று தலைமை கழகத்தின் பாராட்டை பெறும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்.

இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் அல்ல, 200 ஆண்டுகள் ஆனாலும் அன்னை தமிழகத்தில் இந்த இயக்கம் தான் மக்கள் பணியாற்றும். அந்த அளவில் மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது.

இன்றைக்கு இந்த நான்கு ஆண்டு காலத்தில் 400 ஆண்டுகள் சாதனை படைக்கும் வகையில் மக்களுக்கு தேவையான திட்டங்களை கிள்ளி கொடுத்தால் போதாது என்று அள்ளி, அள்ளி முதலமைச்சர் கொடுத்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக, பக்கபலமாக, துணையாக துணைமுதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.

இன்றைக்கு தென் மாவட்டங்களில் எல்லாம் திட்டங்கள் சென்று வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.3000 கோடியில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
மதுரையில் ரூ.28 கோடியில் புதிய ஆட்சியர் அலுவலகம், எய்ம்ஸ் மருத்துவமனை ,ரூ. 1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி , 586 ஏக்கர் பரப்பளவில் 10,000 வீடுகள் கொண்ட துணைக்கோள் நகரம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் உயர்மட்ட மேம்பாலங்கள், உலகிற்கு பெயர் போன மதுரை மல்லிகை விவசாயிகளை காப்பாற்றும் வண்ணம் 2 கோடியில் சென்ட் தொழிற்சாலை வர உள்ளது. அதேபோல் விரைவில் பாஸ்போர்ட் வர உள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, ஆகிய 3 தாலுகாக்களுக்கும் புதிய வருவாய் கோட்டாசியர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குக்கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் திட்டங்கள், எங்கேயும் மின் தட்டுப்பாடு கிடையாது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .

இன்றைக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 54 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 35 லட்சம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒரேஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து அணைகளிலும் சரியான நேரத்தில் சரியான பருவ காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டதால் ஆண்டுதோறும் உணவு உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து மத்திய அரசின் விருதை பெற்று வருகிறது. இதற்கு துணை முதலமைச்சர் துணையாக நிற்கிறார்.

தமிழகத்தில் நீர் மேலாண்மை புரட்சி செய்யும் வகையில் நமது முதலமைச்சர் கடந்த நான்கு ஆண்டுகளாக ரூ.1,433 கோடி மதிப்பில் தமிழகத்திலுள்ள 6,278 ஏரி கண்மாய்களை தூர் வார நடவடிக்கை மேற்கொண்டார். இதன்மூலம் தமிழகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

உலகை மிரட்டும் கொரோனா நோயை கட்டுப்படுத்தி இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாய் நமது முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். தமிழகத்தில் இந்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட 85.45 சதவீத நபர்களை குணப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இறப்பு சதவீதம் 1.7 என்ற அளவில் தான் உள்ளது.

இந்த கோவிட் காலத்திலும் தமிழகத்தில் 42 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இதன்மூலம் தமிழகத்திற்கு ரூ.31,464 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டை பெற்றுத்தந்து 69,712 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதில் தமிழகமும் தான் முதன்மையாக உள்ளது. இந்த வரலாற்றை முதலமைச்சர் படைத்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் ஊரக தொழில் மேம்பாட்டு வருமானத்தை பெருக்கும் வகையில் ரூ.300 கோடியில் 1,40,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஏப்ரல் முதல் தற்போது வரை 1,53,576 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,974 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத்தொகையும், தொடர்ந்து ஐந்து மாதங்களாக அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்கியும், 36 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கியும், 13 லட்சத்துக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியும், தொடர்ந்து இதுபோன்ற கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை ரூ.7,162 கோடி அளவில் நிதியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். இதற்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

இன்றைக்கு நீங்கள் கழகத்தில் ஆர்ப்பரித்து வந்து இணைந்துள்ளீர்கள். நீங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இதுபோன்ற சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி மதுரை மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கழகத்தை எதிர்த்த அனைத்து எதிர்கட்சிகளையும் டெபாசிட் இழந்தது. கழகம் மாபெரும் இமாலய வெற்றிபெற்றது என்ற சரித்திர சாதனையை பெற்றுத்தந்து அந்த வெற்றியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் பாதங்களில் சமர்பிக்க அயராது களப்பணி ஆற்ற வேண்டும்.

முதலமைச்சர், துணை முதலமைச்சரின் ஆகியோரின் தலைமையேற்று உங்களை ஒப்படைத்து விட்டீர்கள். நிச்சயம் உங்களுக்கு நாங்கள் வேலை வாய்ப்பினை உருவாக்கித்தருவோம். அனைத்து அரசுத்துறை தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறும் வகையில் உங்களுக்கு பல்வேறு பயிற்சி முகாம்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழிகாட்டுதல்படி கழக அம்மா பேரவை சார்பில் பயிற்சி முகாம் உங்களுக்கு வழங்கப்படும்.

அதேபோல் அரசு வேலைவாய்ப்பு மட்டுமல்லாது. தனியார் வேலை வாய்ப்பிலும் உங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தரும் வகையில் இன்றைக்கு முதலமைச்சர் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து உள்ளார். சமீபத்தில் டைக்கான் என்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைப்பு காணொலி காட்சி மூலம் கருத்தரங்கை நடத்தின. இதில் 22 நாடுகள் பங்கேற்றது. அதில் அனைவரும் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பதாக கூறினர்.
இன்றைக்கு திரண்ட இளைஞர்கள் காட்சி வரும் 2021ம் ஆண்டில் புனித ஆட்சிக்கு அத்தாட்சி. நிச்சயம் இன்றே கழகத்திற்கு தொண்டாற்ற புறப்படுங்கள். வெற்றி சரித்திரம் படைப்போம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் காசிமாயன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆர்யா, ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, அன்பழகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, முன்னாள் சேர்மன் மாணிக்கம் மற்றும் பாவடியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்