சிறப்பு செய்திகள்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவோம்-மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திட்டவட்டம்

சென்னை

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் ஊர், ஊராக சென்று மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். அதாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பது தான் என்று கூறினார்.

அந்த நீட் தேர்வை ரத்து செய்யும் வழிமுறைகளும், ரகசியமும் எங்களிடம் தான் இருக்கிறது என்று பொய்களை அடுக்கினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும், எந்த நடவடிக்கையும் விடியா தி.மு.க. அரசால் எடுக்க முடியவில்லை.

இதனால் மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் வேதனை அடைந்துள்ளனர். நம்ப வைத்து தி.மு.க.வினர் கழுத்தறுத்து விட்டனரே என்று கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்த நீட்தேர்வை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காரணமே தி.மு.க, காங்கிரஸ் தான். இப்போதைய ஆளும் தி.மு.க. அன்று அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் 21-12-2010 அன்று மத்திய அரசிதழில் நீட் தேர்வு குறித்து அறிவித்தது. அப்போது குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், தி.மு.க.வின் காந்திசெல்வன் இணை அமைச்சராகவும் பதவி வகித்தனர்.

தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணமாக தி.மு.க. இன்றைக்கு நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று கூறுவது எவ்வளவு பெரிய நாடகம் என்று மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கூறி வருகின்றனர்.

நீட்தேர்வை ரத்து செய்கிறோம் என்று கூறி நாடங்களை அரங்கேற்றி ஏமாற்றி வருகிறார் இன்றைய விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த சில வாரங்களுக்கு முன் விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் நீட்தேர்வு ரத்து குறித்து பிரதமரை சந்தித்து பேச உள்ளேன் என்றார்.

இந்த நிலையில் தான் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே நீட்தேர்வில் தோல்விடையந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தென்காசி மாவட்டம், சுரண்டையை அடுத்துள்ள சேர்ந்தமரம் அருகில் உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் -வெண்ணியார் தம்பதியினரின் மகள் ராஜலட்சுமி(21) கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு திருநெல்வேலியில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு முடிவுகள் 7ம்‌தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீ ஆன்சர் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்து ராஜலட்சுமி சோகமாக இருந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது தாய் தந்தை இருவரும் வேலைக்கு சென்ற பின்பு தனது தாய் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் தாயின் சேலையில் தூக்கு போட்டு ராஜலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.

ஏற்கனவே நீட்தோல்வி பயத்தால் மாணவி அரியலூர் கனிமொழி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நடப்பாண்டில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூவர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டனர். இப்போது ராஜலட்சுமி நான்காவது உயிரிழப்பு ஆகும்.

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளு மாணவ, மாணவிகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த விடியா தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் மாணவ, மாணவிகளையும், பெற்றோர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்கு கேட்டு வருவார்கள்.

அப்போது நீட் தேர்வு ரத்து என்ன ஆச்சு என்று ஸ்டாலினிடமும், அவரது மகன் உதயநிதியிடம் கேட்காமல் விட மாட்டோம் என்று மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கூறி வருகின்றனர். நீட் தேர்வு ரத்து என்று நாடகம் ஆடிய ஸ்டாலினுக்கு, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்று மாணவ, மாணவிகள் கூறி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி வாக்குகளை வாங்கி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து குறித்து விடியா தி.மு.க. அரசு வாயை திறக்காமல் மவுனமாக இருக்கிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு. இது தான் தி.மு.க.வின் வாடிக்கையாகி விட்டது. இனி ஏமாற்ற முடியாது என்று மாணவ, மாணவிகள் திட்டவட்டமாக கூறினர்.