தற்போதைய செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.60 லட்சம் நிதியுதவி – இன்பதுரை எம்.எல்.ஏ வழங்கினார்

திருநெல்வேலி

ராதாபுரம் தொகுதியிலுள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழக அரசின் புத்தாக்க நிதி உதவித்திட்டத்தில் ரூ.60 லட்சம் நிதியுதவியை இன்பதுரை எம்.எல்.ஏ., வழங்கினார்.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் ஒன்றியத்திலுள்ள 18 ஊராட்சிகளை சேர்ந்த ஊரகத்தொழில் முனைவோர்கள், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோர்களுக்கு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் தமிழக ஊரக திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி உதவி தொகுப்பு 169 நபர்களுக்கு ரூபாய் 60 லட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி கருங்குளத்திலுள்ள கேப் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை கலந்து கொண்டு வள்ளியூர் ஊராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்கள் 169 பேருக்கு சிறப்பு நிதி உதவித்தொகையை வழங்கினார்.

விழாவில் இன்பதுரை எம்.எல்.ஏ., பேசுகையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இத்திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் கடனுதவி பெற்று சுய தொழில்கள் தொடங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டி இந்த பேரிடரால் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியை வெல்லலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயல் அலுவலர் அசன், ஒன்றிய கழக செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், அந்தோணி அமலராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.