சிறப்பு செய்திகள்

விடியா தி.மு.க அரசை தோலுரித்து காட்டுவோம்-எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்குவோம்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் சூளுரை

மதுரை

உத்வேகத்தோடு, உற்சாகத்தோடு உழைக்க கழக தொண்டர்கள் தயாராகி விட்டனர். விடியா தி.மு.க. அரசை தோலுரித்து காட்டுவோம், எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் சூளுரைத்து உள்ளார்.

மதுரையில் கிறிஸ்டல் சமூக அமைப்பின் தொடக்க விழா பூங்கா முருகன் கோவில் உள்ள சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பத்து பேருக்கு சிறப்பு விருந்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பொறுப்பாளர்கள் ஜெகன், முகமது உமர், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க செயலாளர் நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் மட்டத்தை உயர்த்தலாம் எனவும், பேபி அணையை சீரமைத்த பின் 152 அடி நீர் மட்டத்தை உயர்த்தலாம் எனவும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அம்மா அவர்கள் பெற்று தந்தார். கடந்த அம்மா ஆட்சி காலத்தில் 142 அடியாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் மூன்று முறை தேக்கி வைக்கபட்டது

அணை என்பது தண்ணீரை தேக்கி வைக்க தான். அதற்காக விதியை நிர்ணயம் செய்வது நேரம், காலம் பார்ப்பது இயற்கைக்கு முரணானது. பருவமழை ஒத்துழைப்புடன் தான் நீரை தேக்க முடியும். இப்போது ரூல்கர்வ் என்ற விதி அணை பாதுகாப்பு சட்டத்தின் படி செயல்படுத்தப்படுகிறதா, அது சட்டமா விதியா, உத்தரவா, ஆணையா என்று தெரியாத நிலையில் விவாதம் பொருளாக இருக்கிறது.

பருவமழை காலங்களில் தான் அணையில் நீரை தேக்க முடியும். உச்சநீதிமன்றம் நமக்கு வழங்கிய உரிமையை பறிக்கும் விதமாக தான் ரூல்கர்வ் என்ற உத்தரவு அமைந்துள்ளது. இது நமக்கு பாதகமாக உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அதேபோல் காவிரி பிரச்சினையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். எடப்பாடியார் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டார். நடுவர் மன்றத்தை இறுதி தீர்ப்பை வெளியிட்டும் தற்போது சவாலாக இருக்கிறது.

கேரளாவில் நடைபெற்ற தென் மண்டல கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உள்ளார். முல்லை பெரியாறு, காவேரி போன்ற பிரச்சினையில் தீர்வு காண முயற்சி செய்தாரா, என்பதற்கு வரக்கூடிய காலங்களில் பலனை பொறுத்து தான் இருக்கும்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை உச்சநீதிமன்றம் வரை சென்று உயர் நீதிமன்றம் இன்றைக்கு தெளிவாக வரிக்கு வரி தெளிவாக புரியாதவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

எடப்பாடியாரை ஏகமனதாக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது 100 சதவீதம் செல்லும் என்றும், தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இந்த தீர்ப்புக்குப் பிறகு
எடப்பாடியாருக்கு பல பணிகள், கடமைகள் இருக்கின்றன.

தி.மு.க.வினர் முதலில் எட்டுவழிச்சாலையை எதிர்த்தார்கள். இப்போது ஆதரிக்கிறார்கள். எட்டு வழிச்சாலை காலத்தின் கட்டாயம் என்று பேசுகிறார்கள், 6 பேர் விடுதலை கேள்விக்குறியோடு இருக்கிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது நாங்களே விடுதலை செய்வோம். நாங்கள் விடுதலையை முன்னெடுத்து செல்வோம் என்று பேசினார்கள் தி.மு.க.வினர். ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்தபிறகு வாய்மூடி மவுனியாக இருக்கின்றனர்.

டாஸ்மாக் கடையை மூட குடும்பத்தோடு போராட்டம் நடத்தினார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி, கல்லூரி, கோவில் அருகே இடமாற்றம் என்ற பெயரில் மதுக்கடை வைக்கிறார்கள்.

இன்றைக்கு நில எடுப்பு பணிகளை கூட தி.மு.க.வால் செய்ய முடியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அ.தி.மு.க ஆட்சியில் நிலம் எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சிறு சல,சலப்பு கூட ஏற்படவில்லை. புதிய விமான நிலைய விரிவாக்கம் வாழ்வாதாரத்தை எந்தளவுக்கு கேள்விக்குறியாக்கி உள்ளது என்பதை மக்கள் பார்க்கிறார்கள்.

மக்களே வாட்டி வதைக்கும் சொத்து வரி உயர்வு, மின்கடன உயர்வு, டீசல் பற்றாக்குறையால் பஸ்கள் நிறுத்தம் இப்படி திமுக அரசு ஸ்தம்பித்து போய் உள்ளது, இதையெல்லாம் திமுக அரசுக்கு நினைவூட்ட கடமையாற்றும் நிறைய பணி எடப்பாடியாருக்கு உள்ளது. தி.மு.க அரசை தோலுரித்து காட்டுவோம்.

எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்குவோம். எடப்பாடியார் தலைமையில் வேகத்தோடு, உத்வேகத்தோடு, உற்சாகத்தோடு கழக தொண்டர்கள் உழைக்க தயாராகி விட்டனர்.