சிறப்பு செய்திகள்

கழகத்தை ராணுவ கட்டுக்கோப்புடன் எடப்பாடியார் வழி நடத்துவார் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

தூத்துக்குடி

கழகத்தை ராணுவ கட்டுக்கோப்புடன் எடப்பாடியார் வழி நடத்துவார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார்.                                                 

கழகத்திற்கு உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கழுகுமலையில் நகர செயலாளர் முத்துராஜ் தலைமையில் கழுகாசலமூர்த்தி கோவில் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

அதேபோல் கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் தேவர் சிலை முன்பும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலை முன்பும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கழகத்தினருடன் கொண்டாடினார்.

இதன்பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை அம்மாவின் மறைவுக்குப்பிறகு கடந்த நான்கேமுக்கால் ஆண்டுகாலம் சிறப்பாக தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அம்மாவின் நல்லாட்சியை நடத்திக்காட்டி சாதனை புரிந்தவர் எடப்பாடியார்.

இதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது கழக தொண்டர்கள் அனைவராலும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட எடப்பாடியார் தலமையிலான கழகத்திற்கு நீதிமன்றம் அளித்துள்ள மகத்தான தீர்ப்பின் மூலம் நீதி கிடைத்துள்ளது.

இனிமேல் கழகத்தை ராணுவ கட்டுக்கோப்பு மிகுந்த வலிமையுடன் வழிநடத்தக்கூடிய ஒரே தகுதி முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு மட்டும் தான் உண்டு என்பதை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ கூறினார்.