அரசு விழாக்களில் எங்களை அழைக்காமல் அவமதிக்கிறார்கள்-கோவை ஆட்சியரிடம் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார்

கோவை
கோவை மாவட்டத்தில் நடைபெறும் அரசின் விழாக்களுக்கும் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்களாகிய எங்களை புறக்கணிப்பதை கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரியும்
கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்களான மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர் செ.தாமோதரன் எம்.எல்.ஏ, விபி.கந்தசாமி எம்.எல்.ஏ., கழக இளைஞர் அணி துணை செயலாளர் டி.கே.அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ., ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகத்தின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம். ஆனால் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும், திட்டப் பணிகள் தொடக்க விழாவிலும் கழக சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பதில்லை.
உதாரணத்திற்கு மருதமலை கோவிலில் மண்டபம் கட்டும் பணிக்கான தொடக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினரான என்னையும், அப்பகுதி கழக வார்டு கவுன்சிலரையும் அழைக்காமல் திமுக பகுதி செயலாளரை வைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு தான் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோவையில் மட்டும் எல்லாம் தலைகீழாக உள்ளது. அதேபோல கிணத்துக்கடவு தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் அளிக்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரை சில பள்ளிகளில் மட்டும் அழைத்தனர்.
சில பள்ளிகளில் அழைக்காமலேயே திமுக நிர்வாகிகளை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மேலும் நீங்கள் வர அவசியமில்லை என தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று மக்கள் பிரதிநிதிகளாகிய கழக சட்டமன்ற உறுப்பினர்களை அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா? மேலும் அவிநாசி சாலை மேம்பாலங்களில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கிறது. நாங்கள் போஸ்டர்கள் ஒட்ட சென்றால் போலீசார் எங்களை தடுக்கின்றனர்.
மேலும் இங்கு நடைபெறும் அரசு விழாக்களின் அழைப்பிதழ்களில் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் பெயரை மட்டும் போட்டு விட்டு எங்களை நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை. வெள்ளலூர் பேருந்து நிலையம் குறித்து எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம்.
இவ்வாறு மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் தெரிவித்தார்.