தற்போதைய செய்திகள்

காணொலிக் காட்சி மூலம் அரசுத்திட்டங்களை தொடங்கி வைப்பதை விமர்சனம் செய்த திமுக, காணொலிக்காட்சி மூலம் கட்சியை நடத்துகிறது – வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு

மதுரை:-

காணொலிக் காட்சி மூலம் அரசுத்திட்டங்களை தொடங்கி வைப்பதை விமர்சனம் செய்த திமுக இன்றைக்கு காணொலிக் காட்சி மூலம் கட்சியை நடத்துகிறது என்று ஸ்டாலின் மீது மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தாக்கி பேசினார்.

 வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது;-

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலில் கழக அம்மா பேரவை,கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, இளைஞர் பாசறை ஆகிய முப்படை அணிகள் போருக்கு தயாராக உள்ளது. இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இளைஞர் இளம்பெண் பாசறை அம்மா சீரிய சிந்தனையில் உருவாக்கப்பட்டது. இதில் 36 லட்சம் பேர் இணைந்தனர் நீங்கள் மதுரை கிழக்குத் மாவட்டத்தில் உள்ள அனைத்துதொகுதிகளிலும் கழகத்தின் வெற்றிக்கு வழி செய்யும் வகையில் செயலாற்ற வேண்டும் .நமது இயக்கத்திற்கு முடிவே கிடையாது உயர உயர மேலே பறந்து கொண்டே போகும்.

இன்றைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் தலைமை ஏற்று இளைஞர்கள் அணி திரண்டு கழகத்தில் சேர்ந்து வருகின்றனர். ஆனால் திமுகவில் எந்த இளைஞரும் கட்சியில் இணைந்ததாக கேள்விப்பட்டது உண்டா? ஏன் என்றால் திமுக முடிந்துவிட்ட வரலாறு. இனிமேல் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது.

காணொலி காட்சி மூலம் அம்மா பல்வேறு அரசுத் திட்டங்களை திறந்து வைத்தார். அப்போது ஸ்டாலின் இதை விமர்சனம் செய்தார். ஆனால் இன்றைக்கு திமுகவின் பொதுச்செயலாளர் தேர்வே காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. காணொலிக் காட்சி மூலம் தான் இன்றைக்கு கட்சி நடத்துகிறார் ஸ்டாலின்.

அதேபோல் பூத் கமிட்டியில் இன்றைக்கு கழகத்தில் ஏராளமானோர் பணியாற்ற போகிறார்கள். ஆனால் திமுகவில் 13 பேர் தான் பூத் கமிட்டிக்கு இருக்கப்போவதாக ஸ்டாலின் கூறுகிறார். 13 என்ற நம்பர் ராசியில்லாத நம்பர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே வரும் தேர்தலில் திமுக தோல்விக்கு இதுவே அத்தாட்சி.

இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த முதலமைச்சர் விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு என்று கூறினார். ஆனால் ஸ்டாலினோ ஒன்றிணைவோம் வா என்று நோய் பரப்ப முயற்சி செய்தார். இதன்மூலம் மக்களுக்கு கேடு விளைவித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பேராசை தான் அது நிராசையாக நிச்சயம் மாறும்.

இன்றைக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் எங்கேயும் இல்லை. ஏனென்றால் குடிமராமத்து திட்டம் மூலம் நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. மேலும் தமிழகத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, தடையில்லா மின்சாரம் இப்படி எந்த குறையும் இல்லாமல் முதலமைச்சர் ஆட்சி செய்கிறார். முதலமைச்சருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சரும் உறுதுணையாக இருந்து வருகிறார்.

எந்தக் குறையை சொல்லி திமுக ஓட்டு கேட்க போகிறது. ஆகவே பாசறை நிர்வாகிகள் அனைவரும் கழக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நம்மை வீழ்த்த யாரும் கிடையாது. கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். அதையெல்லாம் ராஜதந்திரத்தோடு முதலமைச்சரும் துணை முதலமைச்சர் எடுப்பார்கள்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.