தற்போதைய செய்திகள் பெரம்பலூர்

நீர்நிலைகளில் சிறுவர்கள் இறங்காமல் கண்காணிக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு, பெரம்பலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர்

மீட்பு பணிக்குரிய இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். நீர்நிலைகளில் சிறுவர்கள் இறங்காமல் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

வடகிழக்கு பருவமழை காலங்களில் வருவாய்துறையினர் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு அரசு கட்டுபாட்டில் உள்ள பொது கட்டடங்கள், தனியார் திருமண மண்டபங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், தங்கள் பகுதிகளில் அங்கன்வாடி சத்துணவுக்கூடங்கள் கட்டடங்களை ஆய்வு செய்து பலவீனமான கட்டடங்களை கண்டறிந்து தகுதி வாய்ந்த இடங்களை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

அனைத்து துறை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் புதுப்பிக்கப்பட்ட தொலைபேசி எண்கள் அடங்கிய கையேட்டினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைமானிகளை தணிக்கை செய்து தயார் செய்திட வேண்டும்.

அனைத்து முதல் செயல்பாட்டாளர்களுடன் (First Responders) சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் தொடர்பில் இருக்க வேண்டும். நீர்நிலைப்புறம்போக்குகளான ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகள் பலவீனமாக உள்ளனவா என கண்டறிந்து அவற்றை பலப்படுத்த சம்மந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். மழை காலங்களில் சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து ஏற்படும் தடைகளை அகற்றிட தேவையான Bulldozers, JCBs, Power Saws and Other Tree Cutting Equipment’s உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கும், அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். அதனடிப்படையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்திடவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொதுப்பணித்துறை மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. எனவே பொதுமக்கள், சிறுவர்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்காமல் கண்காணிக்க வேண்டும். அரசு கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டடங்களை கண்டறிந்து, அவற்றை சீர் செய்திடவேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, பலவீனமாக உள்ளவற்றை சீர் செய்திடவும், உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை தேவையான அளவு முன்கூட்டியே இருப்பு வைத்து விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பலவீனமான நீர்நிலைகளின் கரைகள் மற்றும் மதகுகளை சரிசெய்திடவும், சுகாதாரத்துறையின் மூலம் மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திடவும், அதிக மருந்துகள் இருப்பில் வைத்திடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் அனைத்து மின்பொறி சாதனங்களும் ஆய்வு செய்து, சரிசெய்தும், மின விநியோகம் சூழ்நிலைக்கேற்றவாறு செய்திடவும், கால்நடை துறை மூலம் கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளை

ஆய்வு செய்து, தகுந்த மருந்து வழங்கிட ஏதுவான சூழ்நிலையில் வைத்திருக்கவும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெள்ள பாதிப்பு காலத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான போதிய ஏற்பாடுகளுடனும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் வெள்ளக் காலங்களில் வேளாண் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் இதரப் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து அறிக்கை அனுப்பிடவும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சார்பில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் மழை நீர் தங்குதடையின்றி செல்ல வழிகள் ஏற்படுத்தவும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் வெளியேற்றிட மாற்று வழிகளை ஏற்பாடு செய்திடவும், மீட்புப் பணிகளுக்கான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்டஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) கிறிஸ்டி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமார், பேரிடர்கால மேலாண்மை வட்டாட்சியர் தமிழரசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.