தற்போதைய செய்திகள்

முதலமைச்சரை, ஸ்டாலினால் கனவில் கூட வெல்ல முடியாது – மு.பரஞ்ஜோதி பேச்சு

திருச்சி

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் கனவில் கூட வெல்லமுடியாது என திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி பேசினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி, சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கழக அமைப்புச்செயலாளரும், பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.வளர்மதி, மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி ஆகியோர் முன்னிலையில் கழகத்தில் இணையும் விழா மண்ணச்சநல்லூர்-சமயபுரம் ரோட்டிலுள்ள வெங்கங்குடி அருள் மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவில் கழக அமைப்புச்செயலாளரும், பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.வளர்மதி, மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி ஆகியோர் முன்னிலையில் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கழகத்தில் இணைந்தனர்

இவ்விழாவில் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் லட்சியப் பாதையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கழகத்தை புதுப்பொலிவுடன் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மகளிருக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கக்கூடிய இயக்கம் கழகம் மட்டும்தான். அதனால்தான் பெண்கள் இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தி, நிதி உதவி அளித்து, மகளிர் சுயமாக சம்பாதிக்கும் திறமைக்கு முக்கியத்துவம் அளித்து, மகளிருக்கு தனிமரியாதை ஏற்படுத்தி தந்தவர் புரட்சித்தலைவி அம்மா. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட சட்டம் இயற்றி பெண்களின் காவல் தெய்வமாக விளங்கி வருபவர் புரட்சித்தலைவி அம்மா.

அந்த வகையில் தற்பொழுது மனித உரிமை கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலாளர் சத்தியவாணிமுருகன், செயலாளர் ஜெயசித்ரா, மாவட்ட இணைச் செயலாளர் கௌசல்யா, பரிமளா மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தற்பொழுது இந்த இயக்கத்தில் இணைந்துள்ளீர்கள்.

புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்திவரும் முதலமைச்சர் எடப்பாடியார் கழக அமைப்பில் மூன்றில் ஒருபகுதி பதவிகளை பெண்களுக்கு வழங்கி, புரட்சித்தலைவி அம்மாவைப்போல் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார். எனவே, நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கழகத்தில் களப்பணியாற்றினால் நல்லதொரு எதிர்காலம் உங்களை தேடிவரும்.

புரட்சித்தலைவி அம்மா காட்டிய லட்சியப் பாதையில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடியார் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழக மக்களை காக்க தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருவதுடன், தமிழகம் முழுவதும் இடைவிடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்களுக்களை துவக்கி வைத்தல் என அரசு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதுடன், வயல்வெளியில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரிடம் நேரடியாகச் சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ஆனால், தன்கட்சியை கூட சுயமாக வழிநடத்தத்தெரியாமல் தட்டுத்தடுமாறி கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சிப்பணியை தன் மனைவியிடமும், தன்மகன் உதயநிதியிடம் கொடுத்துவிட்டு, வீட்டிலேயே முடங்கி இருப்பது மட்டுமல்லாமல் அல்லும், பகலும் மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடியார் அரசு மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் கூறுவதையே மக்கள் பணியென நினைத்துக்கொண்டிருக்கிறார்.

2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலைப்போன்று நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கூறி, கழக அரசு மீது அவதூறுகளை பரப்பி, மக்களை நம்பவைத்து வெற்றிபெற்று முதலமைச்சராகி விடலாம் என பகல் கனவு காண்கிறார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பகல் கனவுகளை தவிடுபொடியாக்கிவிடும் வகையில் முதலமைச்சர் எடப்பாடியாரின் சாதனைகளும், திட்டங்களும் மக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் களப்பணியில் நாம் அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும். 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் கனவில் கூட வெல்லமுடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் அனைவரும் சபதம் ஏற்று களப்பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்டக் கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேசினார்.