தற்போதைய செய்திகள்

தி.மு.க அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகி விட்டது

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை,

தி.மு.க. அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகி விட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கலில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டிற்காக உழைத்த தியாகிகளுக்கு ஆட்சியில் இருக்கும் பொழுதும், ஆட்சி இல்லாத பொழுதும் மரியாதை செய்யும் ஒரே இயக்கம் இந்த இயக்கம் தான். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மணி மண்டபங்கள், நினைவு தூண்கள் ஆகியவற்றை எல்லாம் அமைத்து அவர்களுக்கு என்றும் அழியாப்புகழை உருவாக்கி தந்தது அம்மா ஆட்சி தான்.

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரையாண்டு காலத்தில், மக்களுக்கு எந்த திட்டங்களும் வழங்கவில்லை. தி.மு.க அறிவித்த திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகத்தான் உள்ளது. திமுக ஆட்சியில் நாள்தோறும் நடைபெற்று வரும் அவலங்களை, மக்களிடத்தில் எடப்பாடியார் தோலுரித்து காட்டி வருகிறார். தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார்.

இன்றைக்கு ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணத்தை நனவாக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு உள்ளது, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் விரைவில் நிரந்தர பொதுச்செயலாளராக ஆவார். அது மட்டுமல்லாது அடுத்து வரப்போகும் தேர்தல் காலங்களில் மகத்தான வெற்றியை பெற்று அம்மாவின் புனித அரசை மீண்டும் அமைப்பார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கழக அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா, மாவட்ட கழக பொருளாளர் குமார், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் மற்றும் சக்தி விநாயகர் பாண்டியன் மாணிக்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.