தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் பொய் வழக்குகளை சட்டரீதியாக வென்றெடுப்போம்-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி

கழக நிர்வாகிகள் மீது தி.மு.க. போடும் பொய் வழக்குகளை சட்டரீதியாக வென்றெடுப்போம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 28-ந்தேதி உரிமைக்குரல் முழக்கப் போராட்டம் நடத்துவது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் கோவில்பட்டி இனாம் மணியாச்சியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி மாணவ மாணவிகளின் வாக்குகளை பெற்ற தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுக்காமல் மாணவ மாணவிகளை ஏமாற்றி வரும் செயலை வன்மையாக கண்டிப்பது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க. அரசின் செயலை கண்டிப்பது,

குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குவோம் என்று அறிவித்து விட்டு வாக்குறுதியை நிறைவேற்றாத அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டிப்பது, எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட வாசகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

வாக்களித்த மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்பதை மறந்து விட்டு கழகத்தினரை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பொய் வழக்கு போட முயற்சிப்பதை கண்டு நாங்கள் சிறிதும் அஞ்ச மாட்டோம், பொய்வழக்குகளை சட்டத்தின் மூலம் வென்றெடுப்போம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.