சிறப்பு செய்திகள்

விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

சென்னை

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும், ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சரால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எனினும் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில், அரசு வெளியிட்டுள்ள நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது, கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நகராட்சி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.