தமிழகம்

34 லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் தலா 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நாட்களில் 34 லட்சம் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு ஆகிய பொருட்களுடன் முட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையில் முட்டைகளை வழங்கும் போது மாணவர்கள் அன்றாடம் பள்ளிகளுக்கு வரவழைத்து வழங்க இயலாது என்றும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக போக்குவரத்து வசதியின்மை முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளிக்கடைபிடித்தல் ஆகியவற்றால் ஒரே நேரத்தில் முட்டை வழங்கினால் அவை கெடுவதற்கும் உடைவதற்கும் என்றும் சத்துணவுத்திட்டத்தின் கீழ் 20 லட்சத்து 38 ஆயிரத்து 745 தொடக்கப்பள்ளி மாணவர்கள், 13 லட்சத்து 61 ஆயிரத்து 165 உயர்தொடக்கப்பள்ளி மாணவர்கள்,

4, 746 தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட மொத்தம் 34 லட்சத்து 4 ஆயிரத்து 656 மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோரின் அத்தாட்சியுடன் ஒரு மாதத்தில் இரு முறை அந்தந்த சத்துணவு மையங்களுக்கு வரவழைத்து முட்டைகளை உலர் உணவுப்பொருட்களுடன் உரிய வழிமுறைகளை பின்பற்றி அந்தந்த பள்ளிதலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை ஈடுபடுத்தி பணிகளை உடனுக்குடன் முடித்திடுமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை பெருமாநகராட்சி துணை ஆணையர் ஆகியோரை கேட்டுக்கொள்ளலாம் என்றும் அதன் பொருட்டு அரசாணை வழங்குமாறு சமூக நலத்துறை செயலாளர் மதுமதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அந்த அரசாணையில் கொரோனா நோய் பரவல் காரணமாக சத்துணவுத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதம் ஒன்றுக்கு தலா 10 முட்டைகள் வழஙக சமூக நலத்துறை ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது, மேலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் அடிக்கடி வருவதை தவிர்க்கும் விதத்தில் பள்ளிக்கல்வித்துறையினரால் வழங்கப்படும் கல்வி உபகரணங்களை வழங்கும்போதே உலர் உணவு பொருட்கள் மற்றும் முட்டைகளையும் சேர்த்து வழங்க ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.