தற்போதைய செய்திகள்

கொரோனா விதிகளை மீறினால் அபராதம், தண்டனை – தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை

கொரோனா நோய்த் தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம், தண்டனையை விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரச் சட்டத்திருத்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது முடக்கம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றுமாறு தொடர்ச்சியாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும்,ஒரு சிலர் நோய்த் தொற்று விதிகளை பின்பற்றாமல் நோய்ப் பரவலுக்கு காரணமாக அமைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவோர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற செயல்கள் முற்றிலும் களையப்பட வேண்டிய ஒன்று. இதனை கருத்தில் கொண்டே விதிகளை மீறுபவர்கள் மற்றும் தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்தது.இது தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத் திருத்த விதிகளைப் பரிசீலித்த ஆளுநர், அந்த அவசரச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளியின்றியும்,முகக்கவசம் அணியாமலும் தொடர்ந்து சென்றுவருகின்றனர்.இது கொரோனா நோய் பரவலை அதிகரிக்க வழிவகை செய்துள்ளதால்,அரசு பொது சுகாதாரச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய முடிவு செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின்படி முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாது நோய்ப் பரவலுக்கு காரணமானவர்கள் மீது சம்பந்தப்பட்ட இடத்திலேயே நடவடிக்கை எடுக்க மாநகராட்சி, சுகாதாரத் துறை, காவல்துறை போன்ற துறையினருக்கு இந்த அவசரச் சட்டத்தின் வாயிலாக அதிகாரம் வழங்கப்படும் என உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.