தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 9ம்தேதி முதலமைச்சர் வருகை – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலை:-

முதலமைச்சர் எடப்படி கே.பழனிசாமி வரும் 9-ம்தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டம் வருகிறார் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வரும் 9-ம்தேதி அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்ச்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தூசி கே.மோகன் (செய்யாறு), வி.பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்திற்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

‘புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மேம்பாட்டில் அதிக அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் வருகிற 9-ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,

மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம், ஆகிய நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் முதலமைச்சர் நிகழ்ச்சிகளில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் முனைப்புடன் சிறப்பாக பணியாற்றி நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்/

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் சேவூர் எஸ்.இராமசந்திரன் , மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், வருவாய்த் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி, மகளிர் திட்டம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, போக்குவரத்துத்துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு முதலமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.