மற்றவை

கொரோனா சிகிச்சையில் குணமடைவோர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

கொரோனா வைரஸ் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்புபவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சரின் சீரிய தலைமையில் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு செம்மையாக ஈடுபட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் நோய் தொற்றின் விரீயம் குறைவாக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று வரை 576 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தற்பொழுது 163 நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது சதவீதத்தில் பார்த்தால் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 68.22 சதவீதம் ஆகும். குணமடைந்து வீடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதனால் தான். எனவே, கொரோனா வைரஸ் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்புபவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை 6-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை 10-ந்தேதி முதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்புடைய நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி தமிழ்நாடு மாநில கிளையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நிவாரண பொருட்களான 100 பெட்சீட், 100 டவல், 100 வாளி ஆகியவைகளை கொரோனா வார்டுகளுக்காக இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி திருவாரூர் மாவட்ட கிளை சார்பில் ரெட்கிராஸ் சொஸைட்டி செயலாளர் வரதராஜன் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜிடம் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமூர்த்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.