தற்போதைய செய்திகள்

உயர்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழ தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே காரணம் துணை – முதலமைச்சர் புகழாரம்

சென்னை

தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழ தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே காரணம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாளைய உலகை தாங்கிப் பிடிக்கும், இளைய தலைமுறை தூண்களான, மாணவ – மாணவியரின் சிந்தனையை வளப்படுத்தி, அவர்களது செயலாற்றலை மேம்படுத்தி, வளமும் நலமும் மிக்க புதிய உலகத்தை உருவாக்கிட, வழிவகை செய்து தரும் ஆசிரியப் பெருமக்களுக்கு, ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில், மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

அறிவுலகம் போற்றுகின்ற, சிந்தனைச் செம்மல்.ஆன்றோரும் சான்றோரும் புகழ்ந்து பாராட்டும், தத்துவ மேதை
ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, நாட்டின் உயர் பதவியான, குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த,
தலைப்பாகை கட்டிய தமிழ்மகன்.பெருமைக்குரிய, டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் …
அதுவே இன்று நாம் கொண்டாடும் ஆசிரியர் தினம்!

ஒரு பிறப்பில் ஒருவர் கற்கும் கல்வியானது, அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல், அவருக்கு, ஏழு பிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும் என்பது, தெய்வப்புலவர் வள்ளுவரின் திருவாய்மொழியாகும். அவ்வாறு, ஏழு பிறப்புக்கும் உதவுகின்ற கல்வியை கற்றுத்தரும் ஆசிரியப் பெருமக்கள், எவ்வளவு பெருமைக்குரியவர்கள், அவர்களது சிறப்பு எவ்வளவு உயர்வானது, என்பதை நாம் தெளிவாக உணர முடியும். கல்வி சிறந்த தமிழ்நாடு என்னும், மகாகவி பாரதியின் சொல்லை மெய்யாக்கி, தமிழகத்தை தலைநிமிர்ந்து நடைபோடச் செய்தவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி, அம்மா அவர்கள்.

உயர்கல்வியில், இன்றைய தினம் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழ்வதற்கு காரணம், தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே ஆகும். அம்மா அவர்கள் காட்டிய வழியில், இன்றைய கடினமான காலகட்டத்திலும், பல புதிய கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தி, மாணவர்கள் தங்களது பாடங்களை, வீட்டில் இருந்தவாறே எளிமையாகக் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து, மாணவச் செல்வங்களின் கற்றல், குறைவு படாமல் இருப்பதை, மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதி செய்து வருகிறது.

வருங்காலத் தமிழகம் ஒளிமயமாகத் திகழ்ந்திட, பொறுப்புணர்வுடன் கூடிய அறிவார்ந்த இளைய சமுதாயத்தினரை உருவாக்கிடும் பொறுப்பு, ஆசிரியப் பெருமக்களாகிய உங்கள் திருக்கரங்களில் உள்ளது. அக்கடமையை, நீங்கள் செவ்வனே செய்வீர்கள் என்று, நான் உறுதியாக நம்புகிறேன்.

அறியாமை இருள் நீக்கி, அறிவுக்கண்ணைத் திறந்திடும் அரும் பணியாற்றுவதுடன், கற்பித்தலைத் தாண்டி, மனித நேயத்துடன் சேவையாற்றி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் அத்துணை ஆசிரியப் பெருமக்களுக்கும், இத்தருணத்தில் எனது மனம் நிறைந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும், தெரிவித்துக் கொள்கிறேன்.

கற்பித்தலில் புதுமையைப் புகுத்தி, மாணவச் செல்வங்களுக்கு புதுமைச் சிந்தனைகளில் ஆர்வத்தை ஏற்படுத்திட, இடையராது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப்பணி, மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை, எனது உளமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.