தற்போதைய செய்திகள்

அரசுப்பள்ளி, அரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்

கரூர்

தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளதால் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அரசுப்பள்ளி, அரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் கரூர் மாவட்டத்தில் 2019-2020ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளையும், பதக்கங்களையும், தலா ரூ.10,000க்கான காசோலைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

கிராமங்கள் தோறும் பள்ளிகளை திறந்து வைத்து ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கண்களை திறந்தார் பெருந்தலைவர் காமராசர். அவரைத்தொடர்ந்து ஐ.நா.சபையே பாராட்டும் அளவுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழைவீட்டுப் பிள்ளைகள் பசியாறி கல்வி கற்க பாரத ரத்னா எம்.ஜி.ஆர் திட்டம் கொண்டு வந்தார்.
மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அம்மா அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வந்த அனைத்து திட்டங்களையும் அவர் வழியில் நல்லாட்சி செய்துவரும் முதலமைச்சர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்க தாமதமாகிக் கொண்டு இருக்கிறது. மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அரசுப் பள்ளி மற்றும் அரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்களாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக பல்வேறு உயர் பொறுப்புகளிலே பணிகளில் உள்ளார்கள். அந்த அளவிற்கு கல்வித்தரம் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் ந.முத்துக்குமார், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.