தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முனைப்போடு பாடங்களை கற்பிக்க வேண்டும் – அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள்

ஈரோடு

மாணவர்களும் பல்வேறு விருதுகளை பெறும் வகையில் அவர்களுக்கு ஆசிரியர்கள் முனைப்போடு பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன், தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, வே.பொ.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் , சு.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 13 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவிக்கையில், உடலுக்கு கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று ஒருவனது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது. அத்தகைய சிறப்புமிக்க கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு போதிக்கும் ஆசிரியப் பெருமக்கள் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள். விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, ஆசிரியர்களும் தங்களை போன்று மாணவர்களும் பல்வேறு விருதுகளை பெறும் வகையில் அவர்களுக்கு முனைப்போடு பாடங்களை கற்பிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, முதன்மை கல்வி அலுவலர் ரா.பாலமுரளி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகச்சாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன் மாவட்ட கல்வி அலுவலர்கள் தி.சிவக்குமார், சி.மாதேசன், கா.பழனி, இரா.குழந்தைவேல், த.இராமன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.