தமிழகம்

நல்லாசியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் கௌரவித்தார்

சென்னை

நல்லாசியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கௌரவித்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட 375 ஆசிரியர்களில், சென்னை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

மாணாக்கர்களின் அறிவுக் கண்ணை திறக்கும் ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரும் சிறப்பினை சேர்த்த தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களில் 375 ஆசிரியர்கள் நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் நேற்று டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்றே காலை 10.30 மணியளவில் பிற மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட நல்லாசிரியர்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் எம். பழனிசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.