தற்போதைய செய்திகள்

திருவாரூரில் 8 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கி கவுரவித்தார்

திருவாரூர்

திருவாரூரில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 8 ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிகல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த 8 ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆசிரியர்களுக்கு வழங்கி பாராட்டினார். திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்ததாவது;-

சாதாரண மக்களை பாதுகாக்கின்ற அரசாக விளங்குகின்ற தமிழக அரசு கல்வித்துறைக்கு எண்ணற்ற திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில், இன்றைய தினம், திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு குணநலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொதுநலபோக்கு, நல்லொழுக்கம் போன்றவற்றை கற்பிக்கும் காரணிகளாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள். மேலும், சமுதாய சீர்த்திருத்தத்தில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. சமுதாய முன்னேற்றத்திற்காக ஆசிரியர்கள் ஆற்றும் பணி சிறப்பானதாக அமைகிறது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது, அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல. மாறாக உயிரூட்டுபவர்கள்.

மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற அந்த ஆசிரியர்களை கௌரவப்படுத்துகின்ற விதமாக ஆண்டுந்தோறும் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆ.தியாகராஜன், மாவட்டக்கல்வி அலுவலர்கள் து.பார்த்தசாரதி, மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தெய்வபாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.