தற்போதைய செய்திகள்

சிவகாசியில் 108 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

விருதுநகர்

சிவகாசியில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் தற்போது 18 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த சேவையை விரிவுபடுத்த ஆம்புலன்ஸ் வாகனங்களை கூடுதலாக கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்பாட்டிற்கு வழங்க அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சிவகாசியில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய அதிநவீன 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் 2 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் வென்டிலேட்டர், மாரடைப்பு ஏற்படும் போது உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள், உயிர் காக்கும் மருந்துகள், பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள் மற்றும் அனைத்து அதிநவீன மருத்துவ வசதிகள் கொண்ட நடமாடும் மருத்துவ மனையாக இந்த வாகனங்களில் வசதிகள் உள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன், உதவி ஆட்சியர் தினேஷ்குமார், வட்டாட்சியர் வெங்கடேசன், டாக்டர் அய்யனார், மாவட்ட கழக மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், நகர செயலாளர்கள் அசன்பதுரூதீன், பொன்சக்திவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, மாவட்ட சிறுபாண்மையினர் அணி செயலாளர் செய்யது இப்ராஹீம், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, ராஜபாளையம் நகர அம்மா பேரவை செயலாளர் வக்கீல் முருகேசன், ராஜபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக், நகர இளைஞர் பாசறை செயலாளர் பெரியசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் எம்.கே.என்.செல்வம், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.