கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 72 அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் – மாவட்ட ஆட்சியர் நேரில்ஆய்வு

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கிடையே 72 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் தமிழ்நாட்டில் நேற்று முதல் மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து இயக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பயணிகள் பேருந்துகளில் பின்புறமாக ஏறி முன்புறமாக இறங்க வேண்டும். பச்சைநிற பேருந்துகளில் 34 மற்றும் நீல நிற பேருந்துகளில் 33 பயணிகள் என 60 சதவிகித பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். பேருந்துகளில் பயணிக்கும் நபர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். நடத்துநர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு சானிடைசர் உபயோகப்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு 3 பேருந்துகளும், வேலூருக்கு 5 பேருந்துகளும், திருவண்ணாமலைக்கு 7 பேருந்துகளும், திருப்பத்தூருக்கு 6 பேருந்துகளும், ஓசூருக்கு 40 பேருந்துகளும், தருமபுரிக்கு 8 பேருந்துகளும், கோயம்புத்தூருக்கு 2 பேருந்துகளும், திருச்சிக்கு 1 பேருந்தும், ஒகேனக்கல்லுக்கு 1 பேருந்தும் என மொத்தம் 72 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் மற்றும் கிளை மேலாளர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.