அரியலூர்

அரியலூரில் 11 ஆசிரியர்களுக்கு விருது -அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்

அரியலூர்

அரியலூரில் 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் (நல்லாசிரியர் விருது) ஆசிரியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் , மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தலைமையில் வழங்கினார். நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் பேசுகையில்:-

ஆசிரியர் பணி என்பது கல்வியோடு ஒழுக்கம், தன்னம்பிக்கை, ஊக்கம், விடா முயற்சி, உதவி செய்தல் ஆகியவற்றை மாணவ, மாணவிகளுக்கு ஊட்டி, இச்சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக்கும் சிற்ப்பிகளாக ஆசிரியர்கள் விளங்கி வருகின்றனர். எனவே, ஆசிரியர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் பல விருதுகள் பெற்று அரியலூர் மாவட்டத்திற்கும், மாணவ சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.ஆர்.சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னூலாப்தீன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காமராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் பெ.அம்பிகாபதி (அரியலூர்), பாலசுப்பிரமணியன் (உடையார்பாளையம்), வெற்றிசெல்வி (செந்துறை), பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.