தற்போதைய செய்திகள்

10க்கு 10 அறையில் இருந்து கொண்டு கழக அரசின் நல்ல திட்டங்களை எதிர்த்து குரல் எழுப்புகிறார் ஸ்டாலின் – அமைச்சர் எஸ்.வளர்மதி கடும் தாக்கு

திருச்சி

10க்கு 10 அறையில் இருந்து கொண்டு கழக அரசின் நல்ல திட்டங்களை எதிர்த்து ஸ்டாலின் குரல் எழுப்புகிறார் என்று அமைச்சர் எஸ்.வளர்மதி கடுமையாக தாக்கி பேசினார்.

திருச்சி கருமண்டபத்தில் நேற்று நடைபெற்ற கருமண்டபம் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி பேசியதாவது:-

மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் தினமும் 20 மணிநேரம் மக்களுக்காக உழைத்தார். அவரது மறைவுக்குப் பிறகு விவசாயியான எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறார்.கொரோனா காலத்திலும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது உயிரை துச்சமென மதித்து, பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா பணிகளை ஆய்வு செய்து, கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாத்து வருகிறார்.

ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ 10-க்கு 10 அறையில் உட்கார்ந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடனும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் பேசுகிறார். அரசின் நல்ல திட்டங்களை எதிர்த்து குரல் எழுப்பி, தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் கழகமே வெற்றிபெறும் வகையில் கழகத்தினர் அனைவரும் செயலாற்ற வேண்டும். குறிப்பாக திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கழகத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வளர்மதி பேசினார்.