தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி

திருச்சி

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அ.தி.மு.க.வே வெற்றிபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.

திருச்சி கருமண்டபத்தில் நேற்று கருமண்டபம் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பகுதிச் செயலாளர் ஆர்.ஞானசேகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ””தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அதிமுகவே கட்டாயம் வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசைக் குற்றம் சொல்லியே பெயர் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு மக்கள் மன்றம் நல்ல முடிவை அறிவிப்பார்கள்” என்றார்.

முன்னதாக, கூட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசியதாவது:-

””அதிமுகவில் சாதாரணமானவர்களும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் அப்படித்தான் செயல்பட்டனர். அவர்களைப் போலவே முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் சாதாரணமானவர்களும் பெரிய பதவிக்கு வர முடியும். ஆனால், திமுகவில் சாதாரணமானவர்கள் எம்எல்ஏ, அமைச்சர், முதல்வராக முடியுமா என்று சவால் விடுகிறேன்.

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் வழியில், புரட்சித்தலைவி அம்மா கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம் என்று கூறி தேர்தல் களத்தைச் சந்திப்போம். ஆனால், கருணாநிதி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் கருணாநிதி அரசை நிறுவுவோம் என்று திமுக சொல்ல முடியுமா?. மக்கள் மன்றம் அதை ஏற்றுக்கொள்ளுமா?. ஏனெனில், ஊழலுக்காக களைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான்.

பேரறிஞர் அண்ணா உண்மையான திமுகவைக் கண்டார். ஆனால், மு.கருணாநிதி அதை தனது குடும்பச் சொத்தாக மாற்றினார். எனவே தான், அண்ணா பெயரில் அதிமுகவை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கினார்.
நல்ல பல திட்டங்களை அளித்ததாலேயே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தார். அவரைப் போலவே எம்ஜிஆரின் சாதனையை முறியடித்து தொடர்ச்சியாக புரட்சித்தலைவி அம்மாவும் ஆட்சியில் அமர்ந்தார். அம்மா அவர்கள் மறைந்த பிறகு அதிமுக அழிந்தது என்றும், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகிவிடுவார் என்றும் பலரும் கனவு கண்டனர்.

ஆனால் அம்மா அவர்கள் மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு வளமாக உள்ளது. எந்நேரமும் மேட்டூர் அணை நிரம்பியவாறே உள்ளது. அதேபோல் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பால், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மனிதக்கடவுள் என்று மாணவர்கள் பாராட்டுகின்றனர். கழக இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையில் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர்.

வரும் தேர்தலில் கழகத்தின் தலைமை அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக நினைத்து அனைவரும் செயல்பட வேண்டும். கழகத்தின் வெற்றியை சென்னை கடற்கரையில் துயில் கொண்டுள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆகியோரின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சூளுரை ஏற்க வேண்டும்””.

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.