தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பயிலும் 1184 மாணவர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்கள் மடிக்கணினியில் பதிவிறக்கம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் 11184 மாணவர்களுக்கு பாடங்கள் வீடியோ வடிவில் தமிழக அரசால் தயாரிக்கப்பட்டு மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது என்று கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் பி நாயர் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது:-

மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும் என்று இல்லாமல், நன்கு கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்றால் தான், இன்றைய போட்டி நிறைந்த உலகில் முன்னேற்றப் பாதையில் நடை போட முடியும். கண்டிப்பாக நம் மாணவர்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கிறது. அதனை மென்மேலும் வளர்த்துக் கொண்டு கல்வியில் சிறந்து விளங்கிட ஆசிரிய பெருமக்கள் காரணமாக இருக்க வேண்டும். விடாமுயற்சியுடன் போராடினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் உணர ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் 11184 மாணவர்களுக்கு பாடங்கள் வீடியோ வடிவில் தமிழக அரசால் தயாரிக்கப்பட்டு மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சி வாயிலாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர் பெருமக்களுக்கும் மற்றும் ஏனைய ஆசிரிய பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு தாங்கள் பணிபுரியும் ஒவ்வொரு பள்ளியும் சிறந்து விளங்குவதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை(வளர்ச்சி) கூடுதல் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.குணசேகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், திருமருகல் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.இராதாகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஆசிரிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.