தற்போதைய செய்திகள்

தேனியில் ரூ.6.20 கோடி மதிப்பில் ஊராட்சித்துறை வளாக கட்டடம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பாலங்களையும் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

மாவட்ட அளவில் கிராமங்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தும் அலகாகவும், ஒன்றிய அளவில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் அலுவலகமாகவும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை விளங்குகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள் போதிய இடவசதி இல்லாமல் சிறிய கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

அதனைக் கருத்தில் கொண்டு, 2017-18-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு அலுவலகங்களை ஒருங்கிணைத்து, தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 28,716 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை முதலமைச்சர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், மண்ணச்சநல்லூர்-எதுமலை-எலந்தலப்பட்டி-கண்ணப்பாடி சாலையில் 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் அடைக்கம்பட்டி-நாகலாபுரம் சாலையில் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் 7 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் கட்டப்பட்டுள்ள கட்டடம் மற்றும் 2 பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.