சிறப்பு செய்திகள்

விழுப்புரத்தில் இன்று கழகம் ஆர்ப்பாட்டம்-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்- திரளான தொண்டர்கள் பங்கேற்க முடிவு

விழுப்புரம்

விழுப்புரத்தில் உள்ள அம்மா பல்கலைக்கழகத்தை முடக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த எழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்காக அம்மாவின் ஆட்சியில் விழுப்புரத்தில் அம்மா பெயரில் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.

அம்மா பெயர் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இந்த பல்கலைக்கழகத்தை முடக்குவதோடு வேறு பல்கலைக்கழகத்துடன் இணைக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது.

எனவே விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களின் நலன் கருதி விழுப்புரத்தில் உள்ள அம்மா பல்கலைக்கழகத்தை வேறு பல்கலைக்கழகத்துடன் இணைக்கக்கூடாது. விழுப்புரத்திலேயே அம்மா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து இயங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் விழுப்புரம் அம்மா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிட்டுள்ள தி.மு.க. அரசை கண்டித்து ஜூலை 26-ந்தேதி கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி அம்மா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிட்டுள்ள தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே இன்று (திங்கள்) காலை 9 மணிக்கு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை வகிக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜுனன், செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, கழக அமைப்பு செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றுகின்றனர். இந்த போராட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள்.