சிறப்பு செய்திகள்

நோய் பரவல் முழுமையாக குறையாத காரணத்தினால் திரையரங்குகள், கல்லூரிகளை திறக்க முடியவில்லை – முதலமைச்சர் பேச்சு

சென்னை

கொரோனா நோய்த்தொற்று பரவல் முழுமையாக குறையாத காரணத்தினால் திரையரங்குகள், கல்லூரிகளை திறக்க முடியவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி, இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவியது. அம்மாவின் அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால் இத்தொற்று பரவல் படிப்படியாக நாம் குறைந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது நாள் ஒன்றுக்கு 85,000 பரிசோதனைகள் மேற்கொண்டதன் விளைவாக, இன்றைக்கு இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று குறைவாக இருந்தது, இப்பொழுது அங்கும் படிப்படியாக அதிகரித்திருக்கின்றது.

ஆனால், தமிழகத்தில் முன்பு கொரோனா நோய்த் தொற்று ஆங்காங்கே பரவியிருந்தது. அரசு எடுத்த துரித நடவடிக்கைகளின் காரணமாகவும், பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. இது படிப்படியாகக் குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் அரசினுடைய எண்ணம். அதன் அடிப்படையில், அனைத்து தளர்வுகளும் வழங்கப்பட்டு விட்டன. தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கலாம். போக்குவரத்து, மாநிலங்களுக்கிடைய தவிர்த்து, மற்ற மாவட்டங்களுக்கிடையே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

திருக்கோயில்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், கொரோனா நோய் தொற்று பரவல் முழுமையாக குறையாத காரணத்தால், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றை திறக்க முடியவில்லை. எனவே, பொதுமக்கள் விழிப்போடு இருந்து, அரசு அறிவித்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்றினால், இந்த நோய்ப் பரவலைத் தடுத்து, இயல்பு நிலைக்கு திரும்பலாம். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

திருவள்ளூர் மாவட்டம் சென்னையை ஒட்டி இருப்பதாலும், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதாலும், பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருந்து, அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி நோய்ப்பரவலில் இருந்து தம்மை காத்துக் கொண்டு, கொரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக விரைவில் வருவதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.